திருச்சியில் பெய்த சூறாவளி, கனமழையால் ரூ.1 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம்; கண்ணீர் விடும் விவசாயிகள்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சூறாவளி, கனமழையால் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வாழை, வெற்றிலை, சோளம், தென்னை உள்ளிட்ட விளைப்பயிர்கள் கடும் சேதமடைந்தன. இதேபோல ஆண்டிபட்டி பகுதியிலும் மழையால் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் சுற்றுவட்டாரத்தில் உள்ள காட்டுப்புத்தூர், மஞ்சமேடு, நத்தமேடு, காடுவெட்டி உள்ளிட்ட கிராமங்களில், சுமார் 1300 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொட்டியம் அடுத்த காட்டுப்புத்தூரில் இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் 3 லட்சம் வாழை மரங்கள், வாழை தாருடன் முறிந்தன. இதேபோல சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான வெற்றிலை கொடிகளும் பலத்த காற்றில் சேதமடைந்தன. 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும், 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சோள பயிர்களும் சேதத்திற்குள்ளாகியுள்ளன. ஒரேநாளில் 1 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதால் வேதனையில் ஆழ்ந்துள்ள விவசாயிகள், வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை ஆற்று கரையோர பகுதியில் கனமழையுடன் வீசிய சூறைக்காற்றால் 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. அணைக்கரைப்பட்டி, கண்ணியமங்கலம், வாடிப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படும் நிலையில், திடீரென 1 மணி நேர கனமழையுடன் சூறைக்காற்று வீசியதில், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

குலைதள்ளி பாதி விளைந்த வாழை தார்களுடன் வாழை மரங்கள் முறிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவிட்டதாக தெரிவிக்கும் விவசாயிகள், ஒட்டுமொத்தமாக 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு சேதத்தை உரிய மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்கி தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்சியில் பெய்த சூறாவளி, கனமழையால் ரூ.1 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம்; கண்ணீர் விடும் விவசாயிகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: