சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 82.5 லட்சம் தங்க பசை பறிமுதல்: சூடான் பயணி கைது

மீனம்பாக்கம்: சார்ஜாவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.82.5 லட்சம் மதிப்புடைய தங்க பசை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சூடான் பயணியை சுங்கத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சார்ஜாவில் இருந்து ஃகல்ப் ஏர்வேஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். சூடான் நாட்டை சேர்ந்த ஒரு பயணி சுற்றுலா விசாவில் சூடானில் இருந்து சார்ஜா வழியாக சென்னைக்கு வந்தார்.

அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பேசினார். அவரது உடமைகளை சோதனையிட்டனர். எதுவும் இல்லை. சந்தேகம் தீராததால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். உள்ளாடை மற்றும் ஆசன வாய்க்குள்  மறைத்து வைத்திருந்த பார்சல்களை கண்டுபிடித்தனர்.

பிரித்து பார்த்தபோது, தங்கப்பசை இருந்தது. மொத்தம் 1.85 கிலோ இருந்தது. சர்வதேச மதிப்பு ரூ.82.5 லட்சம். அவரை கைது செய்து, தங்க பசையை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர் சர்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சென்னையில் யாரிடம் இந்த தங்க பசையை கொடுக்க எடுத்து வந்தார் என விசாரணை நடத்துகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: