கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் கவர்னர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: தாக்குதல் நடத்த திட்டம் என உளவுத்துறை தகவலால் நடவடிக்கை

திருவனந்தபுரம்: கேரள கவர்னருக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் கவர்னர் மாளிகையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ‘நிதியமைச்சர்  பாலகோபால் தேசியத்தை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று முதல்வர் பினராய் விஜயனுக்கு நேற்று முன்தினம்  கவர்னர் ஆரிப் முகம்மது கான் கடிதம் அனுப்பினார். கவர்னரின்  கோரிக்கையை நிராகரித்த முதல்வர் பினராய் விஜயன் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று கூறி பதில் கடிதம் அனுப்பினார்.

தற்போது கவர்னரும், முதல்வரும் டெல்லியில் உள்ளனர். கேரள அரசுடன், கவர்னருக்கு மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அவருக்கு எதிராக சிபிஎம், சிபிஐ கட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 15ம் தேதி கவர்னர் மாளிகை முன்பு 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று சிபிஎம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கவர்னர்  மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால், திருவனந்தபுரம் வெள்ளையம்பலம்  பகுதியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: