சேலம் அஸ்தம்பட்டி உழவர்சந்தைக்கு விவசாயி கொண்டு வந்த மெகா சைஸ் சேனைக்கிழங்கு-வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்

சேலம் : சேலம் அஸ்தம்பட்டி உழவர்சந்தைக்கு 23 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் சேனைக்கிழங்கை விவசாயி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார். இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். சேலம் அஸ்தம்பட்டி உழவர்சந்தையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறி, பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில், செட்டிச்சாவடியை சேர்ந்த விவசாயி மகேந்திரன் (50), நேற்று முன்தினம் தீபாவளியன்று மெகா சைசில் சேனைக்கிழங்கை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். அதனை உழவர்சந்தை அதிகாரிகள் எடை போட்டனர். அந்த சேனைக்கிழங்கு, 23 கிலோ எடை இருந்தது.

மிகப்பெரிய அந்த கிழங்கை தூக்க முடியாமல் தூக்கிச் சென்று, பொதுமக்களின் பார்வைக்காக முன்பகுதியில் வைத்திருந்தனர். சந்தைக்கு வந்திருந்த மக்கள், அதனை வியப்புடன் பார்த்தனர். பின்னர் அந்த சேனைக்கிழங்கை கிலோ ₹40 என்ற அடிப்படையில் வெட்டி விவசாயி மகேந்திரன் விற்பனை செய்தார்.இதுபற்றி விவசாயி மகேந்திரன் கூறுகையில், ‘‘எனது விவசாய நிலத்தில் 20 சென்ட் பரப்பளவில் சேனைக்கிழங்கு பயிரிட்டுள்ளேன்.

கடந்த 7 மாதத்திற்கு முன் விதை போட்ட சேனைக்கிழங்கு தற்போது மகசூல் கொடுக்கிறது. குறைந்தது 12 கிலோ எடையில் ஒவ்வொரு கிழங்கும் கிடைக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட சேனைக்கிழங்கில் அதிக எடையாக 23 கிலோவில் இக்கிழங்கு வந்துள்ளது. இதனை மக்கள் பார்த்து வியந்தனர். 2 நாட்களுக்கு முன்பு 18 கிலோ எடைகொண்ட சேனைக்கிழங்கை எடுத்து விற்பனைக்கு கொண்டு வந்திருந்தேன். தற்போது, 23 கிலோ சேனைக்கிழங்கை விற்பனை செய்துள்ளேன்,’’ என்றார்.

Related Stories: