தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி மோசடி வெளிநாட்டிற்கு தப்பி ஓட நடிகை ஜாக்குலின் முயற்சி: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்

புதுடெல்லி: தொழிலதிபர்களிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஜாக்குலின் வெளிநாட்டிற்கு தப்பி ஓட முயன்றதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. தொழிலதிபர்களிடம் இருந்து ரூ.200 கோடி மோசடி செய்து நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நடிகை நோரா பதேஹி ஆகியோருக்கு ஆடம்பர கார்கள் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளை இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நடிகை ஜாக்குலின் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அதன்படி, அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘நடிகை ஜாக்குலின் தனது மொபைல் போனில் இருந்து தரவுகளை அழித்து விசாரணையின் போது சாட்சியங்களை சிதைத்து உள்ளார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் நேருக்கு நேர் உட்கார வைக்கப்பட்டு, ஆதாரங்களை முன்வைத்தபோது, ​​நடிகை ஜாக்குலின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். நடிகை ஜாக்குலின் இந்தியாவை விட்டு வெளியேற விரும்பினார். ஆனால் அவரது பெயர் லுக் அவுட் நோட்டீசில் இருந்ததால். அவரால் செல்ல முடியவில்லை’ என்று கூறியிருந்தது. இதை மறுத்த நடிகை ஜாக்குலின் வழக்கறிஞர், அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: