துப்பாக்கிச்சூடு, ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கை வெளியான பிறகும் எடப்பாடி வாய் திறக்காமல் இருப்பது ஏன்? அதிமுக மாஜி எம்எல்ஏ கேள்வி

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அரசு அமைத்த ஆணையத்தின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. அந்த அறிக்கை வெளியிடப்பட்டு ஆறு நாட்களாகியும் எடப்பாடி வாய் திறக்காமல் மவுன விரதம் இருக்கிறார். 100 நாட்களாக நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை அமைதி வழியில் தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உள்பட 13 பேரை சுட்டுக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதுபற்றி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் மவுனம் காக்கிறார்.

முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அனுப்பி  சிறப்பான சிகிச்சை அளித்திருந்தால் அவர் இன்னும் இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டு காலம் உயிரோடு இருந்திருப்பார். அவரை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்காமல் தடுத்த அமைச்சர்கள் பகிரங்க குற்றவாளிகள். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் மீதும் தீர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: