விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்: அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிகிறது

செனனை: சென்னையில்  விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். முதல்வரின் இந்த மனிதாபிமான செயலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 48 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான இரண்டு கூடுதல் விடுதிக் கட்டிடங்கள், மாணவியர்களுக்கான இரண்டு கூடுதல் விடுதிக் கட்டிடங்கள் மற்றும் நூலகக் கட்டிடம் ஆகிய கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணாசாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சென்னை அண்ணாசாலை, டி.எம்.எஸ்.மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. இதனை அவ்வழியாக சென்று கொண்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்தார். விபத்தினை கண்டு உடனடியாக கான்வாய் வாகனத்தை நிறுத்த சொன்னார்.

உடனடியாக அவர் இறங்கி சென்று காயமடைந்தவரை ஆட்டோ ஒன்றில் ஏற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவலர் ஒருவருடன் அனுப்பி வைத்தார். காயமடைந்த நபர் ஆட்டோவில் செல்லும் வரை முதல்வர் அங்கேயே இருந்தார். அதன் பிறகே அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலனை செல்போனில் தொடர்பு கொண்டு, உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த அருள்ராஜ் என்ற வாலிபருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தினார். விபத்தில் காயமடைந்தது சென்னை சூளைமேட்டை சேர்ந்த அருள்ராஜ் என்பது தெரியவந்தது. அவர் பணி நிமித்தமாக சென்ற போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்து. விபத்தில் சிக்கிய ஒருவரை காரில் இருந்து இறங்கி வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனிதாபிமான செயலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Related Stories: