கேஆர்பி அணையில் இருந்து 13,565 கனஅடி தண்ணீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

கிருஷ்ணகிரி: கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றுப்படுகை மற்றும் ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழையால், மார்கண்டேயன் நதி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஓசூர் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று காலை 3210கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3897கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3780 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28அடியில் தற்போது 41அடிக்கு தண்ணீர் உள்ளது.

இதேபோல் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று காலை 6778கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 17,495கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12,496கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆற்றில் இருந்து வினாடிக்கு 13,565கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52அடியில் தற்போது 49.80அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணை அருகேயுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்வதால் அவ்வழியே செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.

மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. ஆற்றில் இறங்கவோ, தரை பாலத்தை கடக்கவோ கூடாது, கால்நடைகளை குளிப்பாட்டக்கூடாது எனபொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: