இன்டர்போல் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தலுக்கு உலகளாவிய பதிலடி

புதுடெல்லி: ‘ஊழல்வாதிகள், தீவிரவாதிகள், போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு இந்த உலகம் பாதுகாப்பான புகலிடமாக இருக்க முடியாது. அதற்கு உலகளாவிய பதிலடி தேவை’ என இன்டர்போல் பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். சர்வதேச அளவில் விசாரணை அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே இன்டர்போல் அமைப்பு. இந்த அமைப்பில் 195 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்டர்போல் அமைப்பின் 3 நாள் பொதுச் சபை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது: ஊழல் மற்றும் நிதிக் குற்றங்கள் பல நாடுகளில் மக்கள் நலனுக்கு கேடு விளைவித்துள்ளது.

ஊழல் பேர்வழிகள், தீவிரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், வேட்டையாடும் கும்பல்கள் ஆகியோருக்கு பாதுகாப்பான புகலிடமாக இந்த உலகம் இருக்க முடியாது. இத்தகைய அச்சுறுத்தல்கள் உலகளாவிய அளவில் இருக்கும் நிலையில், தனித்தனியாக இதற்கு தீர்வு காண முடியாது. எங்களைப் பொறுத்த வரையில், பாதுகாப்பான உலகம் என்பது பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதிலேயே உள்ளது. நல்ல சக்திகள் ஒத்துழைக்கும் போது, கெட்ட சக்திகள் தானாக செயல்பட முடியாமல் போகும். எனவே இதற்கு உலகளாவிய பதிலடி அவசியம். உள்நாட்டின் நலனுக்கான உலகளாவிய ஒத்துழைப்பே இந்தியாவின் அழைப்பாகும். உலகெங்கிலும் உள்ள போலீஸ் படைகள் மக்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சமூக நலனையும் மேம்படுத்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

* குஜராத்தில் இன்று ராணுவ கண்காட்சி

இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க குஜராத்தின் காந்தி நகரில் பிரமாண்ட பாதுகாப்பு கண்காட்சியை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்காக, 2 நாள் பயணமாக குஜராத் செல்லும் அவர், பாதுகாப்பு கண்காட்சியில் பல்வேறு நவீன போர் தளவாடங்களை அறிமுகப்படுத்தியும் வைக்கிறார். மேலும், ரூ.15,670 கோடி மேம்பாட்டு பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்ட உள்ளார்.

Related Stories: