உலக கோப்பை டி20 முதல் சுற்று நமீபியாவிடம் உதை வாங்கிய ஆசிய சாம்பியன் இலங்கை: 55 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி

ஜீலாங்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் முதல் சுற்று ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், ஆசிய சாம்பியன் இலங்கை அணி 55 ரன் வித்தியாசத்தில் நமீபியாவிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. விக்டோரியா, சவுத் ஜீலாங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த முதல் சுற்று தொடக்க போட்டியில் இலங்கை - நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா முதலில் பந்துவீச முடிவு செய்தார். நமீபியா தொடக்க வீரர்கள் வான் லிங்கன் 3 ரன், டிவான் ல காக் 9 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த நிகோல் லாப்டி 20, ஸ்டீபன் பார்டு 26, கேப்டன் எராஸ்மஸ் 20 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். டேவிட் வீஸ் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி நடையை கட்ட, நமீபியா 14.2 ஓவரில் 93 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், ஜான் பிரைலிங்க் - ஜொனாதன் ஸ்மிட் இணைந்து இலங்கை பந்துவீச்சை பதம் பார்க்க ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 34 பந்தில் 70 ரன் சேர்த்து அசத்தியது. பிரைலிங்க் 44 ரன் (28 பந்து, 4 பவுண்டரி) விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டானார். நமீபியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன் குவித்தது. ஸ்மிட் 31 ரன்னுடன் (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் பிரமோத் 2, தீக்‌ஷனா, சமீரா, சமிகா, ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவரிலேயே 108 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 55 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. கேப்டன் தசுன் ஷனகா அதிகபட்சமாக 29 ரன் எடுத்தார். பானுகா ராஜபக்ச 20, தனஞ்ஜெயா டி சில்வா 12, மஹீஷ் தீக்‌ஷனா 11* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். நமீபியா பந்துவீச்சில் டேவிட் வீஸ், பெர்னார்டு, ஷிகாங்கோ, பிரைலிங்க் தலா 2, ஸ்மிட் 1 விக்கெட் கைப்பற்றினர். நமீபியா அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. அந்த அணியின் பிரைலிங்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

Related Stories: