கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 8305 கனஅடி நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் இருந்து 8305 கனஅடி நீர் திறக்கப்படுவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்பட 5 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் நந்திமலை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.

இந்த தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று 1537 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 3028 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியில், 42.97 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி விநாடிக்கு 2340 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தென்பெண்ணையாற்றில் அதிக அளவு தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மழையை பயன்படுத்தி கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள தொழிற்சாலைகள ரசாயன கழிவுகளை அதிக அளவில் ஆற்றில் திறந்து விட்டு வருவதால் ஆற்று நீரில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் பொங்கி செல்கிறது.

இதேபோல், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.  அணைக்கு நேற்று 4230 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6774 கனஅடியாக  அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 8305 கனஅடி நீர் 4 பிரதான மதகுகள் வழியாக  திறந்து விடப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள தரைப்பாலத்தை  மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்வதால், தரைப்பாலத்தை பொதுமக்கள் கடந்து செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூங்காவுக்கு தரைப்பாலம் வழியாக  செல்லாமல், மாற்று பாதை மூலம் சுற்றுலா பயணிகள் செல்ல  அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 50  அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர்  திறக்கப்படுவதால் தென்பெண்ணை ஆறு பாயும் கிருஷ்ணகிரி, தர்மபுரி,  திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்புடன்  இருக்கும்படியும், ஆற்றில் கால்நடைகளை குளிக்க வைப்பது, துணி துவைப்பது  போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என பொதுப்பணித்துறை தரப்பில்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 243 மில்லி மீட்டர் மழை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. தாழ்வான குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. நேற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதியில் அதிகமாக மழை கொட்டியது. மழை அளவு விவரம்(மில்லிமீட்டரில்) வருமாறு: அஞ்செட்டி 40, தேன்கனிக்கோட்டை 39, ஓசூர் 39, ஊத்தங்கரை 29.20, சூளகிரி 25,  தளி 20, கிருஷ்ணகிரி 15.80, ராயக்கோட்டை 15, பெனுகொண்டாபுரம் 9.20, நெடுங்கல் 5, பாரூர் 3.60, போச்சம்பள்ளி 2.20 என மொத்தம் 243 மி.மீ. மழை பெய்துள்ளது.     

Related Stories: