உலக கோப்பை டி.20 தொடர்: பயிற்சி போட்டியில் நாளை ஆஸி.யுடன் இந்தியா மோதல்

பிரிஸ்பேன்: 8வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. இதில் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென்ஆப்ரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்ற நிலையில், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் உள்பட 8 அணிகள் தலா 2 பிரிவுகளாக தகுதி சுற்றில் மோதுகின்றன.

இதில் இரு பிரிவுகளிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். தகுதி சுற்றில் ஏ பிரிவில் இன்று நடந்த முதல் போட்டியில் இலங்கை-நமீபியா மோதின. மற்றொரு போட்டியில் நெதர்லாந்துடன் ஐக்கிய அரபு அமீரகம் பலப்பரீட்சை நடத்தியது. சூப்பர் 12 சுற்று வரும் 22ம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி வரும் 23ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

இதனிடையே சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள 8 அணிகளும் தலா 2 பயிற்சி போட்டிகளில் மோதுகின்றன. அதன்படி இந்திய அணி நாளை பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுடன் பயிற்சி போட்டியில் ஆடுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

இதற்காக இந்திய வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். பும்ராவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷமியும் பயிற்சி அமர்வில் பங்கேற்றார். இதே மைதானத்தில் மற்றொரு பயிற்சி போட்டியில் வரும 19ம்தேதி நியூசிலாந்துடன் இந்தியா மோத உள்ளது.

Related Stories: