அந்தியூரில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; மக்கள் பாதிப்பு

அந்தியூர்: அந்தியூரில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை பெய்ததால் பெரியார் நகர், அண்ணாமடுவில் 500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக நள்ளிரவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் எண்ணமங்கலம் ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி என கடந்து அந்தியூர் பெரிய ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரியிலிருந்து கடந்த 2 நாட்களாக வெள்ள நீர் வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோட்டிலும் அந்தியூரிலிந்து பவானி, அம்மாபேட்டை செல்லும் ரோட்டிலும் வெள்ளம்போல் செல்கிறது. குறிப்பாக, அந்தியூர் பெரியார் நகரில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

மேலும் அழகு நகர், அண்ணாமடுவு பகுதிகளிலும் 300 வீட்டிற்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரில் பாம்பு, தேள்கள் மற்றும் விஷப்பூச்சிகளும் அடித்து வரப்படுகின்றன. 40 ஆண்டுகளில் இல்லாத மழை தற்போது அந்தியூர் பகுதியில் பெய்துள்ளதால் வரட்டுப்பள்ளம் அணை, கெட்டி சமுத்திரம் ஏரி, எண்ணமங்கலம், ராசாங்குளம்,  சந்தியபாளையம், வேம்பத்தி, ஆப்பக்கூடல் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் மெயின் ரோட்டில் இரண்டு இடங்களில் ரோட்டை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால், சத்தியமங்கலம், அத்தாணி, வழியாக பவானி செல்லும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது.

பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று  முன்தினம் இரவு சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ராசிபுரம்: ராசிபுரம்  அருகே, வெண்ணந்தூர், சர்க்கார்தோப்பு மற்றும் ராசாபாளையம் உள்ளிட்ட  பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.  மேலும், விவசாய நிலங்களில் மழைநீர்  தேங்கியது. அதேபோல், மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 10 வீடுகளில் உள்ள பொருட்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் நாசமானது.

Related Stories: