உலக பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு 107ம் இடம்: ஆண்டுக்கு ஆண்டு பின்தங்கும் அவலம்

புதுடெல்லி: உலக பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 107வது இடத்துக்கு பிடித்துள்ளது. குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வளர்ச்சி குறைதல், உடல் எடை குறைதல், குழந்தை இறப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உலக பட்டினி குறியீடு கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் 2020ம் ஆண்டில் 94வது இடத்தில் இருந்த இந்தியா, கடந்தாண்டு 116 நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட ஆய்வில் 101வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான பட்டினி நாடுகள் குறியீடுக்காக 121 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்தியா மேலும் பின்தங்கியிருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 121 நாடுகளை கொண்ட உலக பட்டினி  பட்டியலில் இந்தியா 107 இடத்தில் உள்ளது. இந்தியாவின் பட்டினி குறியீட்டு மதிப்பெண் 29.1. இது நாட்டை பட்டினி பிரச்னைகளின் தீவிரமான பிரிவில் வைக்கின்றது.

இந்தியாவிற்கு அடுத்தபடியாக ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 99வது இடத்திலும், வங்கதேசம் 84, நேபாளம் 81, இலங்கை 64வது இடத்தை பிடித்து, இந்தியாவை காட்டிலும் முன்னிலையில் உள்ளன. 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளில் வயதுக்கு ஏற்ற உடல் எடை மற்றும் உயரம் இல்லாமல் இருக்கும் 19.3 சதவீதம் குழந்தைகள் உள்ளனர். இது உலக நாடுகளிலேயே மிகவும் அதிகபட்ச சதவீதமாகும். இது ஊட்டசத்து குறைப்பாட்டை பிரதிபலிப்பதாக உள்ளது. இதனிடையே, உலக பட்டினி நாடுகளில் இந்திய பின்தங்கி வருவதை, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். கடந்த 8.5 ஆண்டுகளில் இந்தியா இருண்ட கால சதாப்தத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதற்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: