ஜி7 மாநாட்டை முடித்து கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி


புதுடெல்லி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இத்தாலியில் இருந்து நாடு திரும்பினார். அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய 7 நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியின் அபுலியாவில் கடந்த 3 நாட்கள் நடந்தது. இதில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலானியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பங்கேற்றார். கடந்த 13ம் தேதி இத்தாலி புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஜி7 மாநாட்டில் உரையாற்றினார். அப்போது தொழில்நுட்பத்தில் ஏகபோக உரிமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனவும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் அடித்தளத்தை அமைக்க தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வனமானதாக இருக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போப் பிரான்சிஸ், ஜப்பான் பிரதமர் கிஷிடா உள்ளிட்டோரை மோடி சந்தித்து பேசினார். மேலும், இத்தாலி பிரதமர் மெலோனிவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை மோடி மேற்கொண்டார். அப்போது இரு தலைவர்களும் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதாரம் உள்ளிட்ட உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேசியதோடு பலதரப்பு முயற்சிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நேற்று டெல்லி திரும்பினார்.

மெலோனியுடன் செல்பி
பிரதமர் மோடியுடன் இத்தாலி அதிபர் மெலோனி செல்பி வீடியோ எடுத்து அதை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோவில் பிரதமர் மோடியின் பெயருடன் தனது பெயரை இணைத்து ‘மெலோடி’ என மெலோனி குறிப்பிட்டுள்ளார். ‘ஹலோ ஃப்ரம் மெலோடி டீம்’’ என பதிவிட்டு செல்பி வீடியோவை இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ கடும் வைரலானது. இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மோடி, ‘‘இந்தியா, இத்தாலி நட்புறவு நீடூழி வாழ்க’’ என ஆங்கிலத்திலும், இத்தாலி மொழியிலும் பதிவிட்டுள்ளார்.

The post ஜி7 மாநாட்டை முடித்து கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: