உத்தரகாண்ட் ஆற்றில் வேன் கவிழ்ந்து 14 பேர் பலி

ருத்ரபிரயாக்: உத்தரகாண்டில் டெம்போ டிராவலர் வேன் ஆற்றங்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர். உபி மாநிலம் காசியாபாத்தில் இருந்து சோப்தா துங்நாட் நோக்கி டெம்போ டிராவலர் வேன் ஒன்று 26 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 11 மணிக்கு சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ டிராவலர் வேன், சாலையில் இருந்து சுமார் 250 மீட்டர் கீழேவுள்ள அலக்நந்தா ஆற்றின் கரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 சுற்றுலா பயணிகள் பலியாகினர்.

இவர்கள் அனைவரும் டெல்லியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் காயமடைந்த 13 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து குறித்து முதல்வர் புஷ்கர்சிங் தாமியின் அறிவுறுத்தலின்பேரில், பலத்த காயமடைந்த 7 பேர் ஹெலிஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் ருத்ரபிரயாக் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தன் ட்விட்டர் பதிவில், “உத்தரகாண்டின் ருத்ரபிரயாக்கில் நடந்த விபத்து நெஞ்சை பிளக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post உத்தரகாண்ட் ஆற்றில் வேன் கவிழ்ந்து 14 பேர் பலி appeared first on Dinakaran.

Related Stories: