ஞானவாபி மசூதி வழக்கு சிவலிங்கத்தின் தொன்மையை அறிய கோரிய மனு தள்ளுபடி: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு

வாரணாசி: ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கத்தின் தொன்மையை ஆய்வு செய்யக் கோரிய மனுவை வாரணாசி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, இந்த மசூதி கட்டப்பட்டதாக குற்றம்சாட்டிய இந்து பெண்கள் 5 பேர், மசூதியின் பக்கவாட்டு சுவரில் உள்ள  இந்து தெய்வங்களை ஆண்டு முழுவதும் தினசரி வழிபட அனுமதிக்கக் கோரி வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக, மசூதியில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த ஆய்வின் போது, மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அது நீரூற்று என மசூதி தரப்பு மறுத்துள்ளது.இதற்கிடையே, மசூதியில் உள்ள சிவலிங்கத்தின் தொன்மையை கண்டறியும் சோதனையும், அறிவியல் ஆய்வும் நடத்த வேண்டுமென இந்து தரப்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஷ்வேஷா, இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தார். ஏற்கனவே, 2 முறை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், அறிவியல் ஆய்வு மற்றும் தொன்மை அறியும் சோதனையான கார்பன் டேட்டிங் சோதனை நடத்தக் கோரிய இந்து தரப்பினர் மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார். சிவலிங்கம் என கூறப்படும் பகுதியை சீல் வைத்து பாதுகாக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனவே, சிவலிங்கத்தின் பாதுகாப்பு கருதி, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி மனுவை நீதிபதி நிராகரித்திருப்பதாக அரசு தரப்பு வக்கீல் சஞ்சீவ் சிங் கூறினார். சிவலிங்கத்தின் மீது கார்பன் டேட்டிங் சோதனை நடத்த முஸ்லிம் தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதாடியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: