ஸ்கேன் செய்தால் போதும் சுடச்சுட வரும் இட்லிக்கு ஏடிஎம் மிஷன் பெங்களூருவில் அறிமுகம்

பெங்களூரு: பெங்களூருவில் ‘இட்லி ஏடிஎம்’ மூலம் 24 மணி நேரமும் இட்லிகளை விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பஞ்சு போன்ற இட்லியை சாம்பார், சட்னியில் குழைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனி. இப்போது, ​​ஒரு ஸ்டார்ட்அப் கம்பெனி, தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை பெங்களூருவில் நிறுவியுள்ளது. இது தொடர்பான வீடியோ டிவிட்டரில் வெளியாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர்களான ஷரன் ஹிரேமத், சுரேஷ் சந்திரசேகரன் ஆகியோரால் நிறுவப்பட்ட ப்ரெஷப் ரோபோட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் இந்த இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் இது, 12 நிமிடங்களில் 72 இட்லிகளை சுட்டு தரும். இயந்திரத்தில் இட்லிக்கு தேவையான பொடி, சட்னிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, அதில் வரும் இட்லி மற்றும் சட்னிகளை தேர்வு செய்து பணம் செலுத்தினால், ஒரு நிமிடத்துக்குள் சுடச்சுட இட்லி கிடைக்கும். இதற்கு, பெங்களூருவில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 2016ம் ஆண்டில், தனது மகள் நோய்வாய்ப்பட்டதால், இரவில் இட்லி வாங்குவதற்காக ஹிரேமத் சென்றுள்ளார். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதன் தாக்கத்தால்தான் ஏடிஎம் இட்லி இயந்திரம் உருவாக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது, இட்லி ஏடிஎம் பெங்களூருவில் 2 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கும் இது விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்றும், வேறு உணவுகளையும் ஏடிஎம்.மில் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஹிரேமத் தெரிவித்தார்.

Related Stories: