புதுடெல்லி: ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில், காயம் காரணமாக விலகிய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை டி20 தொடர், ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்கி நவ.13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பதை முடிவு செய்வதில் இந்திய அணி நிர்வாகம் பொறுமை காத்து வந்தது. பும்ரா, ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோரைத் தொடர்ந்து மற்றொரு வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹரும் காயத்தால் விலகியது மேலும் பின்னடைவை கொடுத்தது. இந்த நிலையில், பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி பிரதான அணியில் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா நேற்று அறிவித்தார்.