வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரம்: நயன்தாரா-விக்னேஷ் தம்பதியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

அவனியாபுரம்: மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: திண்டுக்கல மாவட்டம் வேடசந்தூரில் 200 ஏக்கர் பரப்பளவில் மூலிகை மருந்து தயாரிக்க, அஸ்வகந்தா சாகுபடி திட்டம் துவக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநில மூலிகை தாவர வாரியம் மற்றும் மத்திய விவசாய ஆராய்ச்சி நிலைய உதவியுடன் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் என 7 கட்டிடங்கள் இன்று திறந்து வைக்கப்படுகின்றன.

மழைக்காலம் வருவதை முன்னிட்டு நோய் தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக ஏற்கனவே ஒரு கூட்டம் சென்னையில் நடந்தது. அந்த வகையில், வீடுகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கான சூழலை உள்ளாட்சி நிர்வாகம் ஏற்றுள்ளது. தொடர்ச்சியாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தினந்தோறும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த முகாமில் 20 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஹெச்1 என்1 என்கிற வைரஸ் காய்ச்சலால் தினமும் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது இந்த எண்ணிக்கை 30க்கும் கீழாக குறைந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்குவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரம் குறித்து, நயன்தாரா-விக்னேஷ் தம்பதியிடம் சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தசை நார் சிதைவு நோயால் 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள், மாவட்ட நிர்வாகம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்தால், உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: