மதுரை: தமிழ்நாட்டின் பிரசதி பெற்ற கோவில்களின் பெயர்களில் போலி இணையதளம் தொடங்கி பல லட்சம் ரூபாய் வசூலித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், பழனி முருகன் கோவில் மற்றும் சென்னை வடபழனி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களின் போலி இணையதளம் தொடங்கப்பட்டது என்பது புகாராகும்.
இந்த இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் பல லட்சம் ரூபாய் காணிக்கை வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் அமர்வு, கோவில்கள் கோவில்களாக இருக்க வேண்டும் என்றும் வியாபார தலங்களாக இருக்க கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர். அப்போது போலி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன் இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதை தொடர்ந்து போலி இணையதளம் தொடங்கி காணிக்கை வசூலித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இனி கோவில் பெயரில் யாரும் தனியார் இணையதளம் இயக்க முடியாது. கோவில் கோவிலாக இருக்க வேண்டும்; கோவில் வழிபாட்டிற்கான தளம், வியாபார தளம் அல்ல. மேலும் சைபர் கிரைம் ஏடிஜிபி மற்றும் ஒன்றிய அரசையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மறு விசாரணை இந்த மாதம் 27ம் தேதி நடைபெற உளது.