தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலையொட்டி சலுகைகள் கிடைக்குமா? ஒன்றிய பட்ஜெட் நாளை தாக்கல்: தங்கம், அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அறிவிப்புகள் இருக்குமா என எதிர்பார்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் 27 ஆண்டுக்கு பிறகு நாளை ஞாயிற்றுக்கிழமையில் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதில், உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால், பட்ஜெட்டில் பல சலுகைகள் கிடைக்குமா என்றும் தங்கம், அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்த அறிவிப்புகள் இடம்பெறுமா என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜ அரசு பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்தநிலையில், அடுத்த நிதியாண்டிற்கான (2026-27) பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் அன்றைய தினம் 2 அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதிமுர்மு உரையாற்றினார். ஏப்ரல் 2ம் தேதி வரை 2 கட்டங்களாக இந்த கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த விவாதம் பிப்ரவரி 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒன்றிய அரசின் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. நாளை காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்திய வரலாற்றில் 2வது முறையாக ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்பு 1999ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதேபோல் அந்த பட்ஜெட் இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்கதாக இருந்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் மாலை 5 மணிக்குதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த நடைமுறையை பின்பற்றி 1998ம் ஆண்டு வரை மாலை 5 மணிக்குதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த காலனிய ஆட்சியின் நடைமுறையை மாற்றி 1999ம் ஆண்டு காலை 11 மணிக்கு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதனால், 2024 ஜூலை, 2025 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில் பேரவை தேர்தல் நடைபெற்ற பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. வேலைவாய்ப்பின்மை பிரச்னையைக் கையாள்வதற்காக தனியார் துறையில் வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேற்குவங்கம் மற்றும் அசாமில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் மீன்வளம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள். அசாமில் பாஜ ஆட்சியும், புதுச்சேரியில் பாஜ கூட்டணி ஆட்சியும் நடக்கிறது. எனவே, இந்த 5 மாநில பேரவை தேர்தலை மையப்படுத்தி, ஒன்றிய பட்ஜெட்டில் சலுகை அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தங்கம், வெள்ளி விலை விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் தங்கம் வாங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது இந்திய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் உணவு பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பான புதிய அறிவிப்புகள் இருக்குமா என்று மக்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தனிநபர் வருமான உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டது. அதேபோல், ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டது. இதனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால், நாட்டின் உள்கட்டமைப்பு, விவசாயத்தை டிஜிட்டல்மயமாக்குவது போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: