புதுவை தினகரன், விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய `வெற்றி நமதே’ கல்வி நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி: புதுவை தினகரன்-வேலூர் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய `வெற்றி நமதே’ பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சியை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்கான குறிப்புகளை எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.மக்கள் பிரச்னைகளை எடுத்துக்கூறி களத்தில் முன்நிற்கும் தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழான தினகரனும், சர்வதேச அரங்கில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ள வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு தேர்வை எப்படி எதிர்கொள்வது என்று வழிகாட்டும் வகையில் கல்வி தொடர்பாக வெற்றி நமதே நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

இதன் மூலம் பல லட்சக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை பிடித்ததுடன் தங்கள் வாழ்வில் தடம் பதித்து வருகின்றனர். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடும், கனவுகளோடும் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளும் வகையில் தினகரன் நாளிதழும், வேலூர் விஐடி பல்கலைக்கழகமும் இணைந்து ‘வெற்றி நமதே’ கல்வி நிகழ்ச்சி, புதுச்சேரியில் மரப்பாலம், நூறடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் வரவேற்று பேசினார். விஐடி பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர் விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு `வெற்றி நமதே’ கல்வி நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து கணித பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக செல்வலக்ஷ்மி, வேதியியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக பத்மலோசனி, இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக பிரியா, உயிரியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக ஆடியப்பன், உயர்கல்வி இயற்பியல் துறை தொடர்பாக அருணை நம்பிராஜ், ஹோட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மைத்துறை தொடர்பாக ஜேசு பிரெட்ரிக், வேளாண்மை துறை தொடர்பாக மோகன்ராஜ் ஆகியோர் பேசினர். தினகரன் சென்னை பதிப்பு செய்தி ஆசிரியர் எஸ்.மனோஜ்குமார் நன்றி கூறினார்.

மாணவ, மாணவிகளுக்கு வினா-விடை கையேடு;
தினகரன்-விஐடி இணைந்து நடத்திய வெற்றி நமதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு குளிர்பானம், தண்ணீர் பாட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகளுடன் குறிப்புகள் எடுக்க நோட் பேட், நோட்புக், பேனா ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து அவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான வினா-விடை கையேடு ‘தினகரன்’ சார்பில் வழங்கப்பட்டது. இதனை பெற்ற மாணவ, மாணவிகள் ‘தினகரன்’ நாளிதழின் இப்புத்தகம் நிச்சயம் எங்களுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்தனர்.

மதிய உணவுடன் இலவச பஸ் வசதி;
வெற்றி நமதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இலவசமாக சுவை மிகுந்த மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற வெற்றி நமதே நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் வந்து செல்லும் வகையில் பாகூர், காலாப்பட்டு, திருவண்டார் கோவில் மற்றும் கம்பன் கலை அரங்கத்தில் இருந்து தினகரன் சார்பில் இலவச பேருந்துகள் இயக்கப்பட்டது.

Related Stories: