சித்தூர் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்-ஆணையர் உத்தரவு

சித்தூர் : சித்தூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஆணையர் அருணா தலைமையில் 2வது கட்ட நில கணக்கெடுப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது, அவர் பேசுகையில், ‘மாநில அரசு உத்தரப்பின்படி நில அளப்பு கணக்கு ஏற்கனவே முதற்கட்டமாக சித்தூர் மாநகரத்தில் பல்வேறு வார்டுகளில் நில கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. தற்போது, 2வது கட்டமாக நில கணக்கெடுப்பு பணி குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. அடுத்த மாதம் இறுதிக்குள் சித்தூர் மாநகரம் முழுவதும் நில கணக்கெடுப்பு பணி முடிவடைய வேண்டும்.

அதற்கான இயந்திரங்கள் தற்போது மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளது. இதன் மூலம் உடனடியாக சித்தூர் மாநகரம் முழுவதும் நில கணக்கெடுப்பு பணியை பயிற்சியாளர்கள் தொடங்குவார்கள். ஜனவரி மாதத்திற்குள் அரசுக்கு நில கணக்கெடுப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், ஒய்எஸ்ஆர் காலனியை ஆய்வு செய்து நல அளந்து உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகளையும் மாநகராட்சி வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

வீடு கட்டுபவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏராளமான ஒய்எஸ்ஆர் காலனியில் வீடுகள் கட்டுபவர்களுக்கு சிமெண்ட், மணல், செங்கற்கள் உள்ளிட்டவை தட்டுப்பாடு உள்ளதாக புகார்கள் வந்தன. எனவே, வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகள் அதன் மீது தனி கவனம் செலுத்தி வீடு கட்டும் பயனாளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். மின்சார வசதி, கழிவுநீர், கால்வாய் வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.இவை அனைத்தும் ஆன்லைனில் பதிவேடு செய்ய வேண்டும். பதிவேடு செய்த பிறகு அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: