கட்சியில் செல்வாக்கு இழந்த நிலையில் முதல்வர் பதவிக்கு அடிபோடும் வசுந்தரா ராஜே; ராஜஸ்தான் பாஜகவில் பரபரப்பு

பிகானேர்: பாஜகவில் செல்வாக்கு இழந்த நிலையில் முதல்வர் பதவிக்கு  வசுந்தரா ராஜே அடிபோடுவதாக, ராஜஸ்தான் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால், அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கூட போட்டியிடவில்லை. அதேநேரம் மாநில காங்கிரசுக்குள் ஏற்பட்ட மோதல்களால் சலசலப்பும் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில் காங்கிரசுக்கு மாற்றாக கருதப்படும் பாஜகவின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும், மாநில பாஜக தலைமைக்கும் முட்டல் மோதல்கள் அதிகரித்துள்ளது.  வசுந்தரா ராஜே மீண்டும் முதல்வராக கூடாது என்று, சில பாஜக தலைவர்கள் பிரசாரங்களை தொடங்கியுள்ளனர். பாஜக டெல்லி தலைமையும், ராஜஸ்தான் பாஜக முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்தும் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் பிகானேரில் நடந்த ஜன் சம்வத் சபையில்  வசுந்தரா ராஜே பேசுகையில், ‘நம்முடைய வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் உண்டு. நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும். அப்போது தான் நாம் ஜெய்ப்பூரை (மாநில தலைநகர்) சென்றடைய முடியும். கடந்த நான்கு ஆண்டுகளில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது’ என்றார். இந்த நிகழ்ச்சியில் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டாலும் கூட, பாஜகவின் மாவட்ட அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்கள் எவரும் பங்கேற்கவில்லை. வரும் தேர்தலில் தன்னை முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதற்காக வசுந்தரா ராஜே, மக்கள் மத்தியில் பேசி வருவதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: