ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த கள்ளச்சாராயம் பறிமுதல்: வாலிபர் கைது

திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் வசிக்கும் சிலர் மோட்டார் சைக்கிளில் ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கனகம்மாசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள சிவாடா பஸ் நிறுத்தம் அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக ஆந்திரப் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், நெமிலி முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் முனுசாமி மகன் வெங்கடேசன் (26) என தெரிந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், பிளாஸ்டிக் பையில் 30 லிட்டர் கள்ளச்சாராயம் ஆந்திராவிலிருந்து கடத்தி வந்தது தெரிந்தது. இதனையடுத்து, வெங்கடேசனை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த கள்ளச்சாரயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories: