சுப்ரீம் கோர்ட் அடுத்த தலைமை நீதிபதி யார்?: பரிந்துரை பட்டியலை கேட்டது ஒன்றிய அரசு

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி குறித்த பரிந்துரை பட்டியலை அனுப்புமாறு ஒன்றிய அரசு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீதிபதிகளே தேர்வு செய்யும் நடைமுறை (கொலிஜியம்) தற்போது அமலில் உள்ளது. இதற்காக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர் நீதிமன்ற கொலிஜியம் (நீதிபதிகள் தேர்வுக் குழு), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஆகியன உள்ளன.

கொலிஜியத்தில் தலைமை நீதிபதி தவிர மூத்த நீதிபதிகளும் இடம் பெற்றிருப்பர். புதிய நீதிபதிகளாக தேர்வு செய்யப்படுவோர் பட்டியலை கொலிஜியத்திடம் இருந்து பெறும் ஒன்றிய அரசு, அதனை இறுதி செய்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கும். குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அதன்பின் நீதிபதிகள் நியமிக்கப்படுவர். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 27ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொறுப்பெற்ற நிலையில், இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் முடிவடைகிறது.

கிட்டத்தட்ட 74 நாட்களே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார். அதனால் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி குறித்த பரிந்துரை பட்டியலை ஒன்றிய அரசு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித்திடம் கேட்டுள்ளது.

இதற்கான முறையான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே கொலிஜியம் தேர்வு குழுவானது விரைவில் கூடி, உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்து, அதன் பரிந்துரை விபரத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கும். தற்போதைய நிலவரப்படி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள சந்திரசூட், உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: