மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க ஆசிரியையிடம் ரூ.10 அபராதம் கேட்டு ரூ.2.46 லட்சம் அபேஸ்: வாட்ஸ்அப் லிங்க் மூலம் நூதன மோசடி

ஈரோடு: மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க ரூ.10 அபராதம் செலுத்தும்படி வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி ஈரோட்டில் ஓய்வு பெற்ற  ஆசிரியையின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.46 லட்சத்தை மர்ம  நபர் சுருட்டியுள்ளார். ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற  ஆசிரியையின் செல்போனுக்கு கடந்த மாதம் 15ம் தேதி ஒரு மெசேஜ் வந்தது. அதில், ‘‘மின் கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தாததால் உங்களது மின்  இணைப்பு துண்டிக்கப்படும்’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஏற்கனவே மின் கட்டணத்தை சகோதரர் மூலம் செலுத்திவிட்டதாக மெசேஜ் வந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு  கொண்டார்.

எதிர் முனையில் பேசிய நபர், ‘‘மின்சாரத்தை  துண்டிக்காமல் இருக்க, வாட்ஸ் அப்பில் அனுப்பும் லிங்கினை டவுன்லோடு  செய்து அபராத தொகையை மட்டும் செலுத்துங்கள்’’ என  தெரிவித்துள்ளார். இதை நம்பிய ஆசிரியை, அந்த நபர் கூறியவாறு  அப்ளிகேஷனை தனது செல்போனில் டவுன்லோடு செய்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.  அப்போது அதில் ரூ.10 கட்டணம் செலுத்தும்படி  குறிப்பிடப்பட்டிருந்தது. 10 ரூபாய்தானே என அவரும் ஆன்லைனில் தனது  வங்கி விவரங்களை தெரிவித்து, செல்போனுக்கு வந்த ஓடிபி  எண்ணையும் அந்த அப்ளிகேஷனில் பதிவிட்டுள்ளார். அடுத்த சில விநாடிகளில்  அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 46 ஆயிரம்  எடுக்கப்பட்டுள்ளதாக மெசேஜ் வந்தது.

அதிர்ச்சியடைந்த ஆசிரியை, ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் தகவல்  தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி என்ற 2  பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரின் செல்போன் எண் மற்றும்  அப்ளிகேஷன் தகவல்களை வைத்து அவரது வங்கி கணக்கை முடக்கவும், பணத்தை  மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து  சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை நம்பி ஏமாற  வேண்டாம். அதேபோல் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக வரும் விளம்பரங்களை  நம்பியும் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

Related Stories: