கள்ளக்காதலை அம்பலப்படுத்திய தொழிலாளியை கொன்று ஆற்றில் சடலத்தை வீசிய வாலிபர் கைது

வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் உப்புபாளையம் அருகே வேளாகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (51). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பிரேம்குமார் (32). காரை வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த 3ம் தேதி மாரிமுத்துவுக்கும், பிரேம்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாரிமுத்து மாயமானார். இதுபற்றி அவரது மனைவி மல்லிகா வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் சந்தேகத்தின்பேரில் பிரேம்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் இருந்த கள்ளக்காதல் பற்றி மாரிமுத்து பலரிடம் கூறியதால் ஆத்திரத்தில் இருந்ததாகவும், அவரை கழுத்து நெரித்து கொன்று காரில் சடலத்தை எடுத்துச் சென்று லக்கம நாயக்கன்பட்டி அருகே அமராவதி ஆற்றில் வீசியதாகவும் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அமராவதி ஆற்றில் மாரிமுத்துவின் உடலை தேடினர். 3 மணி நேரம் தேடுதலுக்கு பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் சடலத்தை கைப்பற்றினர். பிரேம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: