வேறொருவரை திருமணம் செய்த பள்ளிப்பருவ காதலியை கடத்திய கட்டிட மேஸ்திரி சிக்கினார்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஒரு மலைகிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் கட்டிட மேஸ்திரியாக உள்ள 22 வயது வாலிபர், தனது காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்ததால் மன வருத்தத்தில் இருந்துள்ளார். அவர் கடந்த இரு நாட்களுக்கு முன் இரவு அந்த பெண்ணை சந்தித்து வீட்டை விட்டு வெளியேறி எங்காவது சென்று நாம் வாழலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அவர் கூறியதை நம்பிய அந்த புதுப்பெண் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அன்று இரவு இருவரும் ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் சந்தேகத்தில் இருவரிடமும் விசாரித்தனர். இதில் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதைத்தொடர்ந்து இருவரும் ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். இருவரது வீட்டாரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த புதுப்பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பள்ளியில் படிக்கும்போது காதலித்த பெண்ணை கடத்த முயன்ற கட்டிட மேஸ்திரியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: