காங்கிரஸ் தலைவர் தேர்தல் எதிரொலி சசிதரூர் இன்று சத்தியமூர்த்தி பவனில் வாக்கு சேகரிக்கிறார்: அடுத்த வாரம் மல்லிகார்ஜூன கார்கே வருகிறார்

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இருவரிடையே கடும் போட்டி எழுந்துள்ள சூழ்நிலையில், வாக்கு சேகரிப்பதற்காக சசிதரூர் இன்று சென்னை வருகிறார். அவரை தொடர்ந்து அடுத்த வாரம் மல்லிகார்ஜூன கார்கேவும் வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்தாலும், நிறைய பூசல்கள் கட்சிக்குள் வலுத்து வந்தது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பை கட்சி தலைமை வெளியிட்டது. அதன் அடிப்படையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி காலை  நடைபெறுகிறது.

19ம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே - சசிதரூர் என இருமுனைப் போட்டியே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் ஆகிய இருவரில் யார் வெற்றி பெற்றாலும், சுதந்திரத்துக்கு பின்னர் தென் மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் 6வது தலைவராக இருப்பார். இந்நிலையில், ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பின்னர் காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சத்தியமூர்த்திபவனில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.வாக்குப்பதிவு நடைபெறும் நாளில், தமிழகத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் 88 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். அவர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்தவர்கள் டெல்லியில் இருந்தால் அங்கேயும் வாக்களிக்கலாம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முதல்கட்டமாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் வாக்கு சேகரிப்பதற்காக தமிழகம் வருகிறார்.

இன்று மாலை 3 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும், அவர் அங்கிருந்து புறப்பட்டு கிண்டி சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காமராஜர் நினைவகத்தில் மரியாதை செலுத்துகிறார். அதை தொடர்ந்து, ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் வருகிறார். அங்கு தமிழகத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அவரை தொடர்ந்து வரும் 13ம்தேதி மல்லிகார்ஜூன கார்கேவும் ஆதரவு கேட்டு சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories: