காஷ்மீரில் அமித் ஷா முகாமிட்டுள்ள நிலையில் சிறைத்துறை போலீஸ் டிஜிபி படுகொலை: வீட்டுப் பணியாளர் கைது

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் சிறைத் துறை டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில்,  தலைமறைவாக இருந்த அவரது வீட்டுப் பணியாளரை காவல்துறையினர் கைது செய்து  விசாரித்து வருகின்றனர். ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம்  மற்றும் அரசியல் நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்ய ஒன்றிய உள்துறை  அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார். இந்த நிலையில் ஜம்மு - காஷ்மீரின் சிறைத்  துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா வீட்டில் இருந்த போது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து ஏடிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், ‘சிறைத் துறை டிஜிபி ஹேமந்த் லோஹியா மரணத்தில் சந்தேகிக்கப்படும் முக்கிய  குற்றவாளியும் வீட்டுப் பணியாளருமான ஹாசிர் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கடந்த சில நாள்களாக டிஜிபி அவரது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவுதான் அவரது வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டுப் பணியாளர் அவருக்கு சில உதவிகளை செய்துள்ளார். பிறகு, அந்த அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிய பணியாளர், டிஜிபியை பயங்கரமாகத் தாக்கியுள்ளார். அறைக்குள் இருந்து புகை வந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளியிடம் இருந்து கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொலைக் குற்றவாளியின் டைரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், அவர் பல்வேறு மனநிலை பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவித்தார். அமித் ஷா காஷ்மீரில் முகாமிட்டுள்ள நிலையில், அங்கு சிறைத்துறை டிஜிபி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கொலையான  டிஜிபி ஹேமந்த் லோஹியா, 1992ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாவார். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர் சிறைத்துறை டிஜிபியாக பதவி உயர்வுபெற்று பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டைரியில் ஒரே கவிதைமயம்: கொலையாளி ஹாசிர் அகமதுவின் டைரியில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவர் எழுதிய கவிதைகள் நிறைய உள்ளன. அதில், ‘எனது வாழ்க்கையை மீண்டும் தொடங்க விரும்புகிறேன். வாழ்க்கை என்றும் சிக்கலை மட்டுமே தரும்; ஆனால் மரணம் மட்டுமே என்றுமே அமைதியைத் தரும். ஒவ்வொரு நாளும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் தொடங்குகின்றன. ஆனால், மோசமான அனுபவங்களுடன் முடிகிறது. நான் 99 சதவீதம் சோகமாக இருக்கிறேன்; ஆனால் என் முகத்தில் 100 சதவீதம் போலி புன்னகை உள்ளது. பத்து சதவீதம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறேன். காதல் பூஜ்ஜிய சதவீதமும், மன அழுத்தம் 90 சதவீதமும் உள்ளது. நான் எனது வாழ்க்கையை வெறுக்கிறேன்; அது என்னை மிகவும் காயப்படுத்துகிறது. என் மரணத்திற்காக நான் காத்திருக்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆஷிகி 2 படத்தின் புகழ்பெற்ற ‘புலா தேனா முஜே, ஹை குட்பை துஜே’ என்ற பாடலின் வரிகளும் அந்த டைரியில் இடம்பெற்றுள்ளன.

Related Stories: