இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 ஆண்டாக பலாத்காரம் செய்த ராணுவ வீரர் மீது வழக்கு: பஞ்சாப் போலீசார் அதிரடி

சண்டிகர்: திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை 7 ஆண்டாக பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் மீது பஞ்சாப் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் மலேர்கோட்லாவைச் சேர்ந்த ராணுவ வீரர் குல்வந்த் சிங் என்பவர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் பணியாற்றி வருகிறார். இவர் பஞ்சாப் மாநிலம் நாபாவைச் சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் ஒருவருடன் பழகி வந்தார்.

பின்னர் இருவரும் காதலித்தனர். கிட்டதட்ட 7 ஆண்டுகளாக அந்தப் பெண்ணை காதலித்து வந்த குல்வந்த் சிங், அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் பலமுறை வற்புறுத்தியும், குல்வந்த் சிங் அவ்வப்போது சாக்குபோக்குகளை கூறிவந்தார்.

ஒருகட்டத்தில் தன்னை குல்வந்த் சிங் ஏமாற்றிவிட்டதாக உணர்ந்த அந்தப் பெண், அவரது பெற்றோரிடம் புகார் அளித்தார். அதையடுத்து அவர்கள் தங்களது மகனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தனர். இத்தகவலை அறிந்த அந்தப் பெண், காரார் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து மொஹாலி எஸ்எஸ்பியிடம் புகார் அளித்தார்.

அவரது பரிந்துரையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட குல்வந்த் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது குல்வந்த் சிங் ராணுவப் பணியில் இருப்பதால், உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: