காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்; போலீஸ்காரர் வீரமரணம் சிஆர்பிஎப் வீரர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். சிஆர்பிஎப் வீரர் காயமடைந்தார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள பிங்லானா பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் போலீசார் மீது நேற்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஜாவித் அகமது தர் என்ற போலீஸ்காரர் கொல்லப்பட்டார். சிஆர்பிஎப் வீரர் காயமடைந்தார். இதையடுத்து, தீவிரவாதிகளை பிடிக்க கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதி சுட்டுக் கொலை: ஜம்மு காஷ்மீர், சோபியான் பாஸ்குச்சான் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட தீவிரவாதி நசீர் அகமது பட் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நசீர் அகமது லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவன் என தெரிய வந்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையில், ஏகே ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட தீவிரவாதி பல தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டவன் என்பதும், சமீபத்தில் ஒரு என்கவுண்டரில் இருந்து தப்பினான் என்றும் போலீசார் தெரிவித்தனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று பாரமுல்லாவில் நடந்த என்கவுன்டரில், தடைசெய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

Related Stories: