ராஜபாளையத்தில் கழிவுநீர் வாறுகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உள்ள மதுரை சாலை மற்றும் தென்காசி சாலைகளில் நடக்கும் கழிவுநீர் வாறுகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையத்தில் உள்ள மதுரை சாலை மற்றும் தென்காசி சாலையில், இருபுறமும் வாறுகால் வசதி இல்லாமல் இருந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சாலையோரம் தோண்டி, சாக்கடை கழிவுகளை போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் கொட்டி வைத்துள்ளனர்.

இதனால், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் அதிகளவு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில், வெளியேறும் கழிவுநீர், சாலையின் இருபுறமும் உள்ள வாறுகாலில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுநீர் வாறுகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறுகையில்:

தேசிய நெடுஞ்சாலைகளில் தோண்டப்பட்ட வாறுகால்களை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும். தேங்கியுள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும். இந்த சாலைகள் அனைத்தும் போக்குவரத்து மிகுந்தவையாகும். கொசு உற்பத்தி அதிகமாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாறுகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: