ஒசூர் அருகே புதையல் எடுக்க நண்பனை நரபலி கொடுத்த காவலாளி கைது

கிருஷ்ணகிரி:  ஒசூர் அருகே புதையல் எடுப்பதற்காக நண்பனை கொன்று நரபலி கொடுத்த காவலாளியை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த 28ம் தேதி அவரது விவசாய தோட்டத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். சடலத்தை மீட்ட கெலமங்கலம் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அதில் லட்சுமணனின் நண்பரான மணி என்பவரே புதையல் எடுப்பதற்காக லட்சுமணனை நரபலி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லட்சுமணனின் விவசாய தோட்டத்தில் புதையல் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறியதை அப்படியே நம்பிய நண்பர்கள் இருவரும், இதற்காக மெய்சேரியை சேர்ந்த பெண்ணை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். அமாவாசை அன்று குறிப்பிட்ட நேரத்தில் அப்பெண் வராததால் கோழியை பலியிட்டு இருவரும் பூஜையை தொடங்கியுள்ளனர். அப்போது திடீரென மணி மீது பாய்ந்த லட்சுமணன் அவரது தொண்டையை கடித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் சுதாரித்துகொண்ட மணி கீழே கிடந்த கட்டையை எடுத்து லட்சுமணனை பலமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

இதையடுத்து லட்சுமணனின் சடலத்தை குழியில் வைத்து மணி நரபலி பூஜைகளை மேற்கொண்டுள்ளார். நீண்ட நேரம் காத்திருந்தும் புதையல் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மணி, அங்கிருந்து தப்பியோடியதும் விசாரணையில் தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், மணி சிறையில் அடைக்கப்பட்டார். புதையல் எடுக்கும் ஆசையில் நண்பனையே நரபலி கொடுத்த சம்பவம் ஒசூர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: