மகிளா நீதிமன்ற வளாகத்தில் சாட்சிக்கு கொலை மிரட்டல்: 2 ரவுடிகளை கைது செய்து போலீஸ் விசாரணை

சென்னை: மகிளா நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்த நபரை வழிமறித்து எங்களுக்கு எதிராக சாட்சியம் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். சென்னை பெரியமேடு அல்லிகுளம் மகிளா நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க கோயம்பேடு வடக்குமாட வீதி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த குருநாத பாண்டியன் (57)  நீதிமன்றத்திற்கு வந்தார். பிறகு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு மதியம் 1 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் உள்ள படிக்கெட்டில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது கொலை வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் கணேஷ் புதுநகரை சேர்ந்த சுரேஷ் (எ) நொள்ளை சுரேஷ் (34), கொடுங்கையூர் தென்றல் நகர் 4வது தெருவை சேர்ந்த மோகன் (33) ஆகியோர், சாட்சியம் அளித்த குருநாத பாண்டியனை வழிமறித்து ‘இனிமேல் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு வந்தால், உன்னை வெட்டி கொலை செய்துவிடுவோம்’ என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து குருநாத பாண்டியன் பெரியமேடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின்படி தனிப்படை போலீசார் ரவுடிகளான சுரேஷ் மற்றும் மோகனை அதிரடியாக பிடித்து பெரியமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி பெரியமேடு போலீசார் ரவுடிகள் 2 பேர் மீதும் ஐபிசி 195(எ), 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: