புதுச்சேரி: காதலிக்க மறுத்த இளம்பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர், அசோக் வீதியை சேர்ந்தவர் ரவி மகள் ஷர்மிளா(28). அண்ணா சாலையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கும், இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் ஜோசப்புக்கும்(36) 5 ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஜோசப் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். நாளடைவில் ஜோசப் நடவடிக்கை பிடிக்காததால், காதலிப்பதை ஷர்மிளா நிறுத்தியுள்ளார். ஆனால், ஜோசப் அவரை திருமணம் செய்யும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ஷர்மிளா புகாரின்பேரில் போலீசார், ஜோசப்பை அழைத்து எச்சரிக்கை செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷர்மிளா வேலை முடிந்து வீட்டுக்கு உழவர்சந்தை வழியாக நடந்து சென்றார். அப்போது, ஜோசப் டூவீலரில் ஷர்மிளாவை பின் தொடர்ந்து சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் ஷர்மிளா பேசாமல் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த ஜோசப், பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து, அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த ஷர்மிளா அலறியபடி அங்கேயும், இங்கேயும் ஓடினார். அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவைத்தபோது ஜோசப் கை மற்றும் வயிற்று பகுதியில் தீக்காயம் ஏற்பட்டதால் அவரை போலீசார் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஷர்மிளா நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து ஒதியஞ்சாலை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். இதுகுறித்து போலீசாரிடம் ஜோசப் கூறுகையில், என்னை திருமணம் செய்ய மறுத்து, ஷர்மிளா வேறு நபருடன் பழகினார். அந்த வாலிபரிடம் பழகக்கூடாது, அவருடன் பேசுவதை நிறுத்துமாறு வலியுறுத்தினேன். ஆனால், ஷர்மிளா அதனை கேட்காமல் அவருடன் பேசி, பழகி வந்தார். மேலும் ஒரு கட்டத்தில் என்னிடம் பேசுவதை நிறுத்தியதோடு, முற்றிலுமாக புறக்கணித்தார், பலமுறை அவரிடம் பேசமுயன்றபோது, கண்டு கொள்ளவில்லை. கடந்த 13ம் தேதி இரவு மீண்டும் இதுகுறித்து ஷர்மிளாவிடம் பேசமுயன்றபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்து மண்ணெண்ணெய்யை அவர் மீது ஊற்றி தீ வைத்தேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
