மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்த தொண்டர்: நண்பருடன் சிக்கினார்

மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளைத்தில் இந்து முன்னணி நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த அதே அமைப்பின் தொண்டர், நண்பருடன் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜர் நகர் நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ஹரிஷ் (21). இவர், மேட்டுப்பாளையம் நகர இந்து முன்னணியின் இளைஞர் அமைப்பு பொறுப்பாளராக உள்ளார். கடந்த 26ம்தேதி நள்ளிரவு இவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தியிருந்த காரின் முன் பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்துள்ளனர். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்து முன்னணி நிர்வாகிகள் திரண்டு கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் பைக்கில் வந்து கார் கண்ணாடியை கல்வீசி உடைப்பது பதிவாகியிருந்தது. அதை வைத்து, மேட்டுப்பாளையம்  மகாதேவபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24), காமராஜர் நகரை சேர்ந்த ஹரிஹரன் (25) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களுக்கும், ஹரிஷ்க்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட எஸ்.பி. பத்திரிநாராயணன் கூறுகையில், ‘’கைதான தமிழ்ச்செல்வன் இந்து முன்னணி உறுப்பினர், ஹரிஹரன் அவரது நண்பர். ஹரீசுக்கும் தமிழ்செல்வனுக்கும் இடையே விநாயகர் சதுர்த்தியின்போது, மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அதை பயன்படுத்தி, குற்றவாளிகள் இருவரும் தற்போது அவரது கார் கண்ணாடியை உடைத்து, சம்பவத்தை திசை திருப்ப முயன்றுள்ளனர்’’ என்றார்.

Related Stories: