தென் மாவட்டங்களுக்கு குட்கா கடத்தல் முக்கிய பிரமுகர் பெங்களூருவில் கைது: தூத்துக்குடி தனிப்படையினர் அதிரடி

தூத்துக்குடி: போலி கம்பெனி பெயரில் வங்கி கணக்கு துவங்கி தென் மாவட்டங்களுக்கு குட்கா கடத்திய பெங்களூருவை சேர்ந்தவரை தூத்துக்குடி தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களை ஒழிக்க தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கடந்த 25.06.2022 அன்று முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா கடத்தலில் கைது செய்யப்பட்ட வாஷிம் பாஷா, செல்வா, காளிமுத்து, அருள்ராஜ் ஜேசுபாலன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை வைத்து, அவர்கள் யார், யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர், யார், யாருக்கு எவ்வளவு பணம் அனுப்பியுள்ளனர் என விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம் பெங்களுரூ பின்னிபேட் பகுதியைச் சேர்ந்த  சாமுவேல் ஜெயக்குமார் (எ) சாம் (50) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து எஸ்பி பாலாஜி சரணவன் அளித்த பேட்டி; குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பெருமளவில் சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சாமுவேல் ஜெயக்குமார் என்ற சாம், கம்பெனிகளே இல்லாமல் போலியாக சாம் எண்டர்பிரைசஸ், லேண்ட் ஸ்டார் மற்றும் செல்வி எண்டர்பிரைசஸ் ஆகிய பெயரில் வங்கி கணக்குகள் ஆரம்பித்து, அவற்றின் மூலம் காய், கனி விற்பனை மூலம் கிடைத்த பணம் என குறிப்பிட்டு குட்கா விற்பனை மூலம் பெற்ற பணத்தை வங்கி கணக்குகளில் வரவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் பல இடங்களுக்கு தனது வேலையாட்கள் மூலம் பெருமளவில் குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளார். அவரது செல்போன் எண் மற்றும் கார் எண் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெங்களூருவில் பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஒரு அபார்ட்மெண்டில் அவரது கார் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கைது செய்வதற்கு வீட்டிற்கு சென்று முயன்றபோது அவர் கதவை திறக்கவில்லை, இதனையடுத்து கர்நாடகா போலீசாரின் உதவியோடு பல்வேறு சிரமங்களுக்கிடையே 27ம் தேதி நள்ளிரவில் அவரை கைது செய்து தூத்துக்குடி அழைத்து வந்துள்ளனர். தென் மாவட்டங்களில் பெருமளவு குட்கா விற்பனை செய்த பல வழக்குளிலும் இவர் மூளையாக செயல்பட்டு கோடி கணக்கில் பணம் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் பெங்களூருவில் 10 வங்கிகளில் உள்ள இவரது கணக்குகளில் 16 லட்ச ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. இவர் போலியாக உருவாக்கிய கம்பெனி கணக்குகள் மூலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக ஜி.எஸ்.டி  வரி செலுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஒன்றிய அரசு மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றிற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது எள்றார்.

Related Stories: