புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கியதற்கு கண்டனம்!: மின்துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கத்திற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் மின் விநியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில், மின்துறை தனியார் மயமாக்கத்திற்கான டெண்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த மின்துறை ஊழியர்கள், பணிகளை புறக்கணித்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மின்துறை தனியார் மயமாக்கலை கைவிடக்கோரி புதுச்சேரி சோனாபாளையம் தலைமை அலுவலகத்தில் பொறியாளர்களுடன் திரண்ட ஊழியர்கள், பொய் வாக்குறுதி கொடுத்த மின்துறை அமைச்சரை கண்டித்து முழக்கம் எழுப்பினர். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அப்போது தனியார் மயம் தொடர்பான வரைவு அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் மின்துறை தனியார் மயமாக்கத்திற்கான டெண்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியிருப்பதால் அங்கு மின்துறை பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: