சேடபட்டி பகுதியில் மக்காச்சோள பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகள்-விவசாயிகள் கவலை

பேரையூர் : சேடபட்டி பகுதியில் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.சேடபட்டி பகுதியில் மானாவாரி விவசாயிகளே அதிகம் உள்ளனர். இவர்கள் வருகின்ற பருவமழையை எதிர்நோக்கியே பயிர்களை பயிரிடுவர். சமீபத்தில் பெய்த மழையால் பெருவாரியான விவசாயிகள் பருத்தி, மக்காச்சோள பயிர்களை அதிகம் பயிரிட்டுள்ளனர். தற்போது மக்காச்சோள பயிர்கள் களை எடுக்கப்பட்டு வரும் மழையை எதிர்நோக்கி காத்து கிடக்கின்றன. இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள காட்டுப்பன்றிகள் இப்பகுதியிலுள்ள கண்மாய், ஊருணி, முட்புதர்களில் தஞ்சம் அடைந்து வருகிறது. இவைகள் பகல் நேரங்களில் பதுங்கியும், இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்தியும் வருகின்றன.

நேற்று இரவு சேடபட்டி அருகே அல்லிகுண்டத்தை சேர்ந்த மாணிக்கம், சேகர் ஆகிய விவசாயிகளின் 10 ஏக்கர் நிலத்தில் பயிட்டுள்ள மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தியது. இதேபோல் கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், காளப்பன்பட்டி, சென்னம்பட்டி, சின்னக்கட்டளை, பெரியகட்டளை, பாலார்பட்டி, உள்ளிட்ட பகுதிகளிலும் காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த முறை அமெரிக்கன் படைப்புழு தாக்கலால் மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

 தற்போது காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி வருவதால் இப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை அப்புறப்படுத்துவதுடன், சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: