சாத்தூர் அருகே இருக்கன்குடியில் புதர்மண்டிக் கிடக்கும் அணை பூங்காவாகுமா

*பொழுது போக்கு அம்சமாக படகு சவாரி விடலாம்

*வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கலாம்

சாத்தூர் : சாத்தூர் அருகே, இருக்கன்குடியில் புதர்மண்டிக் கிடக்கும் அணையை பூங்காவாக மாற்றி, நீர் தேக்கத்தில் பொழுது போக்கு அம்சமாக படகு சவாரி விட்டு, வருவாயை பெருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே 24 அடி உயர இருக்கன்குடி அணை உள்ளது. இந்த அணை கட்டுமானப் பணியின்போது, அழகிய செயற்கை நீரூற்றுகள், பழ மரங்கள், பூச்செடிகள் அமைத்து, குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், இதற்கு மாறாக வேப்பமரங்கள், ஒரு சில பழ மரங்கள் மட்டுமே வைத்து வளர்த்தனர். மேலும், முறையான பராமரிப்பு இல்லாமல் அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் சீமைக்கருவேல முட்செடிகளும், நீர்வழிந்தோடும் மதகு பகுதியில் வாகை மரங்கள், சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. அணையின் முழு கொள்ளளவான 24 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கினால் நல்லான்செட்டிபட்டி, சிறுக்குளம் உள்பட சில கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என கூறி, தற்போது வரை 22 அடி உயரம் வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நன்றாக பராமரிக்கப்படும் நிலையில், இருக்கன்குடி அணை மட்டும் பராமரிப்பில்லாமல் காணப்படுகிறது. ஷட்டர்கள் நல்ல முறையில் உள்ளதால் தண்ணீர் கசிவு குறைவு. ஆனால், இப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. தண்ணீர் நிரம்பினால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறும் ஆற்றுப்பகுதியிலும், சீமைக்கருவேல மரங்கள், வாகை மரங்கள் முளைத்துள்ளன.

மேலும், நீர்தேக்கத்தில் தண்ணீர் பாசி படர்ந்து காணப்படுகிறது. புதர் மண்டிய அணைப்பகுதியில் பாம்புகள் உள்ளிட்ட விஷஜந்துகளும் அதிகமாக உள்ளன. அணையில் உள்ள மின்விளக்குகளை சமூக விரோதிகள் உடைத்ததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அணையில் புதர்மண்டிக் கிடக்கும் பகுதியை சீரமைத்து பூங்காக்கள் அமைக்க வேண்டும் அணை நீர்தேக்கத்தில் படகு சவாரி விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: