சாந்தோம் தேவாலயத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழமையான நாற்காலியை திருடிய ஆசாமி கைது

சென்னை: மயிலாப்பூர் சாந்தோம் தேவாலயத்தில் பல லட்சம் மதிப்புள்ள பழமையான நாற்காலியை திருடிய குற்றவாளியை போலீசார் சிசிடிவி பதிவு மூலம் கைது செய்தனர். சென்னை சாந்தோமில் பழமையான சாந்தோம் தேவாலயம் உள்ளது. இது, சுற்றுலா தலம் என்பதால் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். அதேபோல், தேவாலயத்தில் உள்ள அனைத்து பொருட்களும் நூற்றாண்டுகளை கடந்தது. இதற்கிடையே சாந்தோம் தேவாலயத்தில் மிகவும் பழமையான செம்மரத்தால் செய்யப்பட்ட சேர் திடீரென கடந்த 19ம் தேதி  மாயமானது. திருடப்பட்ட சேர் அரியவகை சேர் என்பதால் பல லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சாந்தோம் தேவாலயத்தின் பங்கு தந்தை அருள்ராஜ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதேபோல், ராயப்பேட்டை சிவசாமி சாலையில் உள்ள ரோஸ்லின் (62) என்பவர் வீட்டில் இருந்து 60 ஆண்டுகள் பழமையான குபேரன் சிலை ஒன்றும் மாயமானது. இதுகுறித்து ரோஸ்லின் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த இரண்டு புகார்களின்படி, மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், ராயப்பேட்டை கபாலி நகரை சேர்ந்த முத்து (40) என்பவர் சாந்தோம் தேவாலயத்திற்குள் நுழைந்து விலை மதிப்பற்ற சேரை திருடி சென்றது தெரியவந்தது. மேலும், ரோஸ்லின் வீட்டில் இருந்த குபேரன் சிலையையும் நோட்டமிட்டு திருடியது உறுதியானது. திருடிய சேர் மற்றும் குபேரன் சிலையை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து போலீசார் முத்துவை கைது செய்தனர். பிறகு அவரிடம் இருந்து விலை மதிப்பற்ற பழமையான சேர் மற்றும் குபேரன் சிலை மீட்கப்பட்டது. மேலும், இதுபோல் வேறு எங்கேயாவது பழமையான பொருட்களை திருடி உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாந்தோம் தேவாலயத்தில் பழமையான சேர் திருட்டு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: