வருசநாடு அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்சிலைகள் கண்டுபிடிப்பு

வருசநாடு: தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட தங்கம்மாள்புரம், பழமுதிர்பண்ணை, அய்யனார்கோவில் கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பழமை வாய்ந்த மதுரை வீரன், பொம்மியம்மாள் கற்சிலைகள் கிடைத்துள்ளதாக கிராம பொதுமக்கள் வரலாற்று ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போடிநாயக்கனூர் விவசாய சங்க கல்லூரியைச் சார்ந்த வரலாற்று பிரிவு ஆசிரியர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது, இந்த கற்கள் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தங்கம்மாள்புரம் கிராமவாசிகள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் இச்சிலைகள் இழுத்து வரப்பட்டன. அதை கண்டுபிடித்து நாங்கள் தெய்வ வழிபாடு செய்து வருகிறோம். இந்த கற்சிலைகள் அனைத்தும் பாண்டிய மன்னர் காலத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் என்றனர்.

இத்தகவல் அறிந்ததும் அப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்களும், தொல்லியல் துறை ஆய்வாளர்களும்  சிலைகளை பார்வையிட்டு வருகின்றனர். ஆய்வின் போது, ஏல விவசாய சங்க கல்லூரி பேராசிரியர் மாணிக்கராஜ், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் செல்வம் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: