புழல்: புழல், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட புழல், காவாங்கரை, கன்னடபாளையம், சக்திவேல் நகர், பாலாஜி நகர், காந்தி பிரதான சாலை, புழல் – சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, புழல் மத்திய சிறைச்சாலை, வடகரை, கிரான்ட் லைன், வடபெரும்பாக்கம், விளாங்காடுப்பாக்கம், கண்ணம்பாளையம், சென்றம்பாக்கம், தீர்த்தங்கரையம்பட்டு, செங்குன்றம் – சோத்துப்பாக்கம் சாலை, கும்மனூர், செங்குன்றம் ஆலமரம் காந்தி நகர், பம்மதுகுளம் கலைஞர் கருணாநிதி நகர், அம்பேத்கர் நகர், எடப்பாளையம் அலமாதி வரை செல்லும் திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகள் குறுக்கும் நெருக்கமாக சுற்றித்திரிவதாலும், உறங்குவதாலும் இச்சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பைக்கில் செல்பவர்களும் மாடுகள் மீது மோதி, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து, பலமுறை சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், இதுவரை மாடுகளை சிறை பிடிக்காமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், சாலையில் குறுக்கு நெருக்கமாக சுற்றித்திரியும் மாடுகளை சிறை பிடிக்க ஊழியர்களுடன் சென்றால், தங்களை உள்ளூர் பிரமுகர்களை வைத்து எங்களை மிரட்டுகின்றனர். இதனால், நாங்கள் மாடுகளை சிறை பிடிக்காமல் திரும்பி வருகின்ற சூழ்நிலை உள்ளது. இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மாடு வைத்திருப்பவர்கள் அவரவர் வீடுகளிலேயே பராமரித்து அந்தந்த பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பராமரிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய எந்த சாலையிலும் மாடுகளை விடக்கூடாது எனவும் பலமுறை எச்சரித்தும், மாடு வைத்து இருப்பவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, இனிவரும் காலங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றிதிரிந்தால், அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ்காரரை வைத்து, மாடுகளை சிறை பிடித்து மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மாட்டு கொட்டகைகளில் அடைக்கப்பட்டு அபராதம் விதித்து, மாட்டின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
