சிவகாசி மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு

*உள்வாடகைக்கு விடும் வியாபாரிகள்

*தற்காலிக கடைகளால் இடையூறு

*காய்கறி வாங்க வரும் மக்கள் அவதி

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் கடைகளுக்கு முன்பு தட்டிகள், ஸ்டால்களை அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். நடைபாதைகளில் தற்காலிக கடைகள் அமைத்து போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால், காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசியில் மாநகராட்சிக்கு சொந்தமாக பஸ்நிலையம், முஸ்லீம் பள்ளி வளாகம், அம்பேத்கர் மணி மண்டபம், சிவன்கோவில் அருகில் வணிக வளாகங்கள் உள்ளன. மேலும், மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா காய்கறி மார்க்கெட்டில் 4 பிளாக்கில் 142 கடைகள் கட்டப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள், காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் ஏலம் விடப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.60 லட்சம் வருவாய் வருகிறது.

அண்ணா காய்கறி மார்க்கெட்டில் ஒரு கடைக்கு ரூ.4 ஆயிரம் வீதம் வாடகை வசூலிக்கப்படுகிறது. மார்க்கெட் பகுதியில் ஆண்கள், பெண்களுக்கு கழிப்பறை வசதி, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவை உள்ளன. மார்க்கெட்டில் கடைகளுக்கு முன்பு ஸ்டால்கள், தட்டிகள் அமைக்க அனுமதி இல்லை. ஆனால், கடை உரிமையாளர்கள் மார்க்கெட்டில் உள்ள சாலையை ஆக்கிரமித்து தட்டி போர்டுகள், ஸ்டால்கள் அமைத்து காய்கறி விற்பனை செய்தின்றனர். இதனால், மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் இடநெருக்கடியால் அவதிப்படுகின்றனர். காய்கறிகளை ஏற்றி இறக்க வரும் மினி ஆட்ேடா, வேன் ஆகிய வாகனங்கள் உள்ளே வந்து ெசல்ல சிரமப்படுகின்றன.

நடைபாதை வியாபாரிகளிடம் வசூல்: மார்க்கெட்டில் உள்ள சில கடை உரிமையாளர்கள் நடைபாதை வியாபாரிகளிடம் பணம் பெற்று கொண்டு, சாலையில் அமர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கின்றனர். இதனால், சாலையில் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மார்கெட்டில் உள்ள கடைகள் முன்பு, இருசக்கரவாகங்களை நிறுத்தி காய்கறி வாங்கி செல்ல வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இந்த காலியிடத்தில் மாநகராட்சி அனுமதியின்றி வியாபாரிகள் கடைகள் அமைத்துள்ளனர்.

இதற்கு உள்வாடகை வசூலித்து மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால், மார்கெட்டுக்கு டூவீலரில் வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த இடமின்றி அவதிப்படுகின்றனர். மார்கெட்டுக்கு வரும் பொதுமக்களிடம் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், வாகனங்களை பொதுமக்கள் சாலையில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதன் காரணமாக காலை, மாலை நேரங்களில் மார்க்கெட்டில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. காய்கறி மார்கெட்டில் உள்ள கழிப்பறையை சுற்றிலும் கடைகள் அமைத்துள்ளனர்.

இங்கு கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதே போல் மார்க்கெட்டில் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது. வாயிலை மறித்து சிலர் கடைகள் அமைத்துள்ளனர். இதனால், வாகனங்கள் வந்து செல்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, காய்கறி மார்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவகாசி மாநகராட்சி அண்ணா காய்கறி மார்கெட்டில் ஆக்கிரமிப்புகளை வியாபாரிகளே அகற்றி கொள்ள நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 7 தினங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வியாபாரிகள் முன்வரவில்லை என்றால், மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: