மபி. பள்ளியில் மாணவியின் அழுக்கு சீருடையை கழற்றி துவைத்து கொடுத்த ஆசிரியர்: நல்லது செய்ததற்காக சஸ்பெண்ட்

போபால்: மத்திய பிரதேச பள்ளியில் 5ம் வகுப்பு மாணவியின் அழுக்கான உடையை கழற்றி துவைத்து கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம், ஷாதோல் மாவட்டத்தின் பாரா காலா என்ற இடத்தில் அரசு  தொடக்க பள்ளி உள்ளது. பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இப்பள்ளியில், 5ம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவி, அழுக்கான சீருடையை அணிந்து வந்துள்ளார். அதை பார்த்த சிராவன் குமார் திரிபாதி என்ற ஆசிரியர், மற்ற மாணவிகளின் முன்னிலையில் அழுக்கு சீருடையை கழற்ற வைத்தார். பின்னர், தானே அதை துவைத்து கொடுத்தார். துணி காயும் வரை அந்த மாணவி 2 மணி நேரம் உள்ளாடைகளுடன் நின்றுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. இதைப் பார்த்த கிராம மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் சிராவன் குமார் திரிபாதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவியின் ஆடையை கழற்றி, துவைத்து கொடுக்கும் போது எடுத்த புகைப்படங்களை, பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் வாட்ஸ் அப் குரூப்பில் திரிபாதியே பகிர்ந்துள்ளார். மாணவர்கள் மற்றும் அவர்களின் தூய்மையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதை காட்டவே, அவர் இவ்வாறு செய்துள்ளார். விழிப்புணர்வுக்காக செய்தது, அவருக்கே வினையாக முடிந்துள்ளது.

Related Stories: