ஆந்திராவில் கள்ளக்காதலனுக்காக மோரில் தூக்க மாத்திரைகள் கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி: மாரடைப்பில் இறந்ததாக நாடகம், 3 மாதத்துக்கு பின் குட்டு அம்பலம்

திருமலை: ஆந்திராவில் கள்ளக்காதலனுக்காக மோரில் அதிக தூக்க மாத்திரைகள் கலந்து கணவனை கொன்றுவிட்டு, மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை 3 மாதங்களுக்கு பிறகு தீவிர விசாரணையில் போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம், கே.கங்கவரம் மண்டலத்தை சேர்ந்த பாலாந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோலா சுப்பாராவ். இவருக்கும் கசுலூரு மண்டலம் அப்புமில்லி கிராமத்தை சேர்ந்த சத்யா என்கிற வெங்கட லட்சுமிக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில ஆண்டுகள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது. இந்நிலையில்  வெங்கட லட்சுமிக்கு அதே பகுதியை சேர்ந்த உசிறி ஸ்ரீனிவாஸ் என்பவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது வெங்கட லட்சுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கட லட்சுமி, இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்து விடுமோ என அஞ்சினார். எனவே கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதற்காக கடந்த ஜூன் 1ம் தேதி கணவனுக்கு மோரில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். மோர் குடித்து விட்டு உறங்கச் சென்ற கணவன் தூக்கத்திலேயே உயிரிழந்தார். காலையில், கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி மனைவி வெங்கடலட்சுமி கதறினார். இதை உண்மை என்று சுப்பாராவின் உறவினர்களும் நம்பினர். ஆனால் கணவன் உயிரிழந்த மூன்றே மாதங்களில் வெங்கடலட்சுமி அதிக மகிழ்ச்சியாக இருந்தார்.

சீனிவாசுடன் முன்பைவிட அதிக நெருக்கம் காட்டத் தொடங்கினார். இதனால் சுப்பாராவின் குடும்பத்தாருக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. தங்களது மகனை வெங்கடலட்சுமி கொலை செய்திருக்கக் கூடும் என சுப்பராவின் பெற்றோர் சந்தேகித்தனர். இதையடுத்து வெங்கடலட்சுமி மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வெங்கடலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், வெங்கடலட்சுமி முன்னுக்குப்பின் முரணாக தகவல் கொடுத்தார். இதில் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது, பின்னர் போலீசார் தங்கள் பாணியில் விசாரித்ததில் கள்ளக்காதலனுக்காக, கணவனுக்கு மோரில் அதிகளவு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொன்றதை வெங்கடலட்சுமி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Related Stories: