பாஜ தலைவர் மகனின் ரிசார்ட் கொலை நீரில் மூழ்கியதால் அங்கிதா சாவு: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

டேராடூன்: உத்தரகாண்ட் ரிசார்ட்டில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இளம்பெண் நீரில் மூழ்கி இறந்ததாக தற்காலிக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்டில் உள்ள பவுரி மாவட்டத்தின் யம்கேஷ்வர் தொகுதியில் பாஜ மூத்த தலைவரும், முன்னாள் விவசாய உற்பத்தி பொருள் வாரியத்தின் தலைவருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிசார்ட் உள்ளது. இதில், ரிஷிகேஷ் பகுதியை சேர்ந்த அங்கிதா பண்டாரி (19) என்ற இளம்பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த 18ம் தேதி பணிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. கடந்த வெள்ளிகிழமை சீலா கால்வாயில் அவருடைய சடலம் மீட்கப்பட்டது.

போலீசார் நடத்திய விசாரணையில், ரிசார்ட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் பாலியல் உறவு கொள்ளும்படி ரிசார்ட்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யாவும், மேலாளர் சவுரப் பாஸ்கர், உதவி மேலாளர் அங்கித் குப்தாவும் மிரட்டி உள்ளனர். இதற்கு மறுக்கவே அங்கிதாவை புல்கித் ஆர்யா கொன்று ஊழியர்கள் உதவியுடன் கால்வாயில் வீசியது தெரிந்தது. இதையடுத்து, புல்கித் ஆர்யா, சவுரப் பாஸ்கர், அங்கித் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டு, 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அங்கிதாவின் உடலுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் நான்கு பேர் கொண்ட மருத்துவர்கள் குழு பிரேதப் பரிசோதனை நடத்தி உள்ளது. இதன் தற்காலிக அறிக்கை வெளியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், அங்கிதா தண்ணீரில் மூழ்கியதால் உயிர் இழந்ததாகவும், அவர் இறப்பதற்கு முன்கூட்டிய காயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. ‘தற்காலிக பிரேத பரிசோதனை அறிக்கையை நாங்கள் ஏற்று கொள்ளமாட்டோம். இறுதி அறிக்கை வெளியாகும் வரை அங்கிதாவின் இறுதி சடங்கு செய்ய மாட்டோம்’ என்று அவரது தந்தை வீரேந்திர சிங் பண்டாரி தெரிவித்தார். பின்னர், போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ரிஷிகேஷ் பகுதியில் அங்கிதாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இந்நிலையில், அங்கிதாவின் படுகொலையை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களும், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

*ஆதாரங்களை அழிக்கவே ரிசார்ட் இடிப்பு அங்கிதா பண்டாரி கொல்லப்பட்டதை அடுத்து அந்த ரிசார்ட்டை மக்கள் சூறையாடி தீயிட்டு கொளுத்தினர். இதனால், அந்த ரிசார்ட்டை உடனடியாக இடிக்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். ஆனால், ‘கட்டிடம் உடனடியாக இடிக்கப்பட்டது, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியாக இருக்கலாம்’ என்று அங்கிதாவின் சகோதரர் அஜய் சிங் பண்டாரி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

Related Stories: